நடிகர் ரஜினிகாந்த் நேற்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு எரிச்சலடைந்து கோபமாக ஒருமையில் பேசிவிட்டு கிளம்பினார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தூத்துக்குடி சம்பவம் குறித்து விமான நிலையத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த் காவல்துறைக்கும், அரசுக்கும் ஆதரவாக பேசினார். மேலும் சமூக விரோதிகளின் ஊடுருவல் காரணமாகத்தான் தூத்துக்குடியில் கலவரம் உருவானதாக விளக்கம் கொடுத்து அதிர்ச்சியளித்தார்.

இதனையடுத்து பத்திரிகையாளர் ஒருவர் ரஜினியிடம் அரசுக்கும், காவல்துறைக்கும் ஆதரவாக பேசுகிறீர்களே என கேள்வி எழுப்ப, எரிச்சலடைந்த ரஜினி யோவ்… யார்யா என ஒருமையில் ஏக வசனத்தில் பத்திரிகையாளரை பேசிவிட்டு வேறு கேள்வி இருக்காயா என பேசிவிட்டு கோபமாக கிளம்பிவிட்டார்.

இது பத்திரிகையாளர்கள் மத்தியில் ரஜினிக்கு அவப்பெயரை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினர். இதனையடுத்து விஜயகாந்தை பத்திரிகையாளர்கள் வேறு மாதிரியாக கையாண்டு அவரது பேட்டிகளில் மேலும் மேலும் கோபத்தை ஏற்படுத்தினர். இதனால் அவரது இமேஜ் குறைந்தது. அந்த வகையில் தற்போது ரஜினியும் பத்திரிகையாளர்களை பகைத்துக்கொண்டுள்ளார். விஜயகாந்துக்கு ஏற்பட்ட நிலைமை ரஜினிக்கும் ஏற்படுமா என்பதை இனிவரும் காலம் தான் முடிவு செய்யும்.