சில தினங்களுக்கு முன்னர் சென்னை மெரீனா கடற்கரையில் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மகளிர் உறுப்பினர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் மெரினாவில் ஈழத் தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காவல்துறை தடைவிதித்தது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அவர், காவல்துறை காரணமின்றி நினைவேந்தலுக்கு தடை விதிக்காது, ஏதாவது காரணமிருக்கும் இது தான் என்னுடைய கருத்து என கூறினார். ரஜினியின் இந்த கருத்து நினைவேந்தலுக்கு தடை விதித்த காவல்துறைக்கு ஆதரவாகவும், நினைவேந்தலுக்கு ஏற்பாடு செய்த தமிழ் அமைப்புகளுக்கு எதிராகவும் அமைந்ததால் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் காவிரி பிரச்சனையின் போது ஐபிஎல்லுக்கு எதிராக சென்னை அண்ணா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு கும்பலுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அந்த கும்பல் காவலர்களை கடுமையாக தாக்கியது.

அப்போது அந்த தாக்குதல் வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்ட நடிகர் ரஜினிகாந்த் சீருடை அணிந்த காவலர்களை தாக்கியது வன்முறையின் உச்சம் எனவும், இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதனையடுத்து ரஜினியின் இந்த செயல் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. அப்போது ரஜினியை கண்டித்து சமூக வலைதளங்களில் எட்டப்பன் ரஜினி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் காவல்துறைக்கு வக்காலத்து வாங்கும் விதமாக ரஜினிகாந்த் நினைவேந்தலுக்கு தடைவிதித்ததை ஆதரித்து பேசியுள்ளாதால் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. எட்டப்பன் ரஜினி ஹேஷ்டேக் மீண்டும் ட்ரெண்ட் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Loading...