தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் ரஜின்காந்த் சந்தித்து பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து அரசியல் பிரபலங்களை சந்தித்து வருகிறார். திருநாவுக்கரசு, திருமாவளவன், ஸ்டாலின் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அவரின் விசிட் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், தனது மகள் சௌந்தர்யாவின் திருமண பத்திரிக்கை கொடுக்கவே ரஜினி சென்றார் என அவரின் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை ரஜினி சந்தித்து தனது மகள் திருமணத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பிதழை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி “மகளின் திருமண விழாவிற்கு வருகை தருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்” எனக்கூறினார்.

சௌந்தர்யாவின் திருமணம் நாளை ரஜினியின் போயஸ்கார்டன் இல்லத்தில் எளிமையாக நடக்கவுள்ளது. அதன்பின் ஒரு நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.