கடவுள் கொடுத்துள்ள புதிய பாத்திரம் அரசியல் வாதி. அதையும் சிறப்பாக செய்வேன் என்று நம்புகிறேன் என்று இமயமலை சென்றுள்ள ரஜினி தெரிவித்துள்ளார்.

அரசியலில் களம் இறங்கி உள்ள ரஜினி, எம்ஜிஆா் பல்கலைக்கழகத்தின் 30வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு எம்ஜிஆரின் வெண்கல சிலையை திறந்து வைத்து மாணவா்கள் மற்றும் ரசிகா்கள் மத்தியில் உரையாற்றினார். அதில் எம்ஜிஆா் ஆட்சியை நிச்சியமாக என்னால் கொடுக்க முடியும் என்றும், அதுபோல அரசியிலில் இரு பெரிய ஆளுமைகள் ஜெயலலிதா, கருணாநிதி. அரசியலில் வெற்றிடம் உள்ளது. அதை நிரப்ப என்னால் முடியும் என்று அதிரடியாக பேசினார்.

இந்நிலையில் அரசியல் பணிகளுக்கிடையில் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள ரஜினி, பாபுஜி ஆசிரமம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீா் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள புனிதத் தலங்களில் வழிபாடு செய்து வருகிறார்.

ரிஷிகேஷ் உள்ள தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசிரமத்தில் தியானம் மேற்கொண்டார். அங்கு உள்ள மீடியாக்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பின. அரசியல் பற்றி எதுவும் பேச மறுத்து விட்டார் ரஜினி.

இமயமலைக்கு 95ஆம் ஆண்டிலிருந்து வருகிறேன். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் இடையில் வர முடியவில்லை. ஒரு மனிதன் தன்னைத் தானே தேடி உணா்வது தான் அவனுடைய பிறவியின் முக்கிய வேலை. அதற்காக இங்கு வந்துள்ளேன். ஆன்மீகப் புத்தகங்கள் படிப்பது, எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக மக்களைச் சந்திப்பது, நிறைய தியானம் செய்வதற்காகவும் இங்கு வந்திருக்கிறேன்.எனக்கு இங்கு இயற்கை, மக்கள் மட்டும் போதும். இங்கே எனக்கு சினிமா துறையினா், அரசியல்வாதிகள் யாரும் தேவை இல்லை.

தமிழகத்தில் என்னால் சுதந்திரமாக நடமாட முடியாது. மக்களோடு மக்களாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும். இனி இங்கும் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. முன்பெல்லாம் இமயமலை வரும் சுந்திரமாக இருப்பேன்.

ஒரு நடிகனாக என் வேலையை சரியாக செய்து விட்டேன். தற்போது அரசியல்வாதி என்ற புதிய பாத்திரத்தை இறைவன் கொடுத்துள்ளான். இதையும் சிறப்பாக செய்வேன் என நம்புகிறேன். இந்த ஆன்மீக பயணத்திற்கு பிறகு ஒரு அரசியல்வாதியாக நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை பார்க்க போகிறீா்கள் என்று கூறினார் ரஜினி.