கலைஞருக்கு அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க ரஜினிகாந்த் வலியுறுத்தல்!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என பலத்த கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மரணமடைந்தார். அவரை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய திமுகவினர் எடுத்த முயற்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனையடுத்து இந்த விவகாரம் குறித்த விசாரணை இன்று இரவு 10.30 மணிக்கு சென்னை தலைமை பொறுப்பு நீதிபதி முன்பு வர உள்ளது.

இதனையடுத்து திமுக தொண்டர்கள் தொடர் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என. இந்நிலையில் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலைஞருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். அவருக்கு அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்குவதே அவருக்கு செலுத்தும் மரியாதை என கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை என குறிப்பிட்டுள்ளார்.