ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை கடிதம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்கள் சந்திப்பின்போது தெரிவித்த ஒருசில அரசியல் கருத்துக்கள் ஒருசில அரசியல்வாதிகளை திடுக்கிட வைத்தது. அதனால் அவர் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் ரஜினி உருவபொம்மைகளையும் எரித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினி ரசிகர்களும் பதிலடி கொடுக்கும் வகையில் ஒருசில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த ஒருசில புகார்கள் ரஜினியின் பார்வைக்கு வந்ததால் அவர் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அனைத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு, இக்கடிதம் முலம் தெரிவிப்பது யாதெனில், எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, தலைமை மன்ற நிர்வாகி திரு வி.,எம்.சுதாகருக்கு அதிகாரம் அளிக்கின்றேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினியின் இந்த கடிதம் அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.