முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து தமிழக அமைச்சரவையில் நேற்று விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் கீழ் அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதனையடுத்து ஆளுநர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஏழு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் பேரரிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலரும் ஆளுநரை வலியுறுத்தி வருகின்றனர்.