பக்தையை பாலியல் பலாத்காரம் செய்த டெல்லி சாமியார் மீது வழக்கு!

புது டெல்லி ஷானி தாம் பகுதியில் சாமியார் ஒருவர் தனது பக்தையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டு பலாத்காரம் செய்ததாக அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டாடி மகாராஜ் என்ற சாமியார் ஒருவர் தனது பக்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் அந்த பெண் அச்சம் காரணமாக சாமியார் மீது அப்போது புகார் அளிக்காமல் இருந்தார். ஆனால் தொடர்ந்து தனக்கு மிரட்டல்கள் வந்ததால் சமீபத்தில் சாமியார் டாடி மகாராஜ் மீது புகார் கொடுத்தார்.

அதன்படி கடந்த 10-ஆம் தேதி டாடி மகாராஜ் மீது வழக்கு பதிவு செய்த ஃபதேபூர் பெரி காவல் துறையினர், இந்த புகாரை மாவட்ட புலனாய்வு பிரிவிக்கு அனுப்பினர். இதனையடுத்து சாமியார் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளான 376 (பாலியல் குற்றங்கள்), 377, 354, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்து பேசிய டெல்லி பெண்களுக்கான ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால், மஹரூரில் உள்ள ஸ்ரீ சனிதீர்த்த க்ஷேத்ரா ஆசிரமத்தில் அந்தப் பெண்ணை டாடி மகாராஜ் மற்றும் வேறு சில நபர்களும் சேர்ந்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த கொடூர செயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.