இந்தியன் 2 படத்தை தனது கடைசி படமாக கமல்ஹாசன் ஏன் அறிவித்தார் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

அரசியலுக்கு வருவதை அறிவித்த கையோடு கட்சி பெயரையும் அறிவித்து களம் இறங்கியவர் கமல்ஹாசன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அவரின் கட்சி களம் இறங்கும் எனத்தெரிகிறது. திருவாரூர் இடைத்தேர்தலில் கூட அவரது கட்சியின் வேட்பாளர் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், இந்தியன் 2-வை தனது கடைசி படமாக அறிவித்துள்ளார் கமல்ஹாசன். ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படம் இயற்கை விவசாயத்தை பற்றிய கதையாகும். நம்மாழ்வாரை இன்ஸ்பிரேசனாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கதையில் செயற்கை உரங்களால் ஏற்படும் பாதிப்பு, நமது பாரம்பரிய விதைகள் மற்றும் செடிகளுக்கு வெளிநாடுகள் உரிமை கொண்டாடுவது, விவசாயம் மீதான மக்களின் அறியாமை, அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் என அனைத்தும் பதிவு செய்யப்படவுள்ளதாம்.

எனவே, இதுபோன்ற பலமான கதை கொண்ட படத்தில் நடிப்பது தனது அரசியல் எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும் என கமல்ஹாசன் கணக்கு போடுகிறாராம். எனவே, இதையே தனது கடைசி படமாக அறிவித்துவிட்டதாக அவர் தெரிகிறது.