தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசு நீக்கப்பட்டதன் பின்னணி தெரியவந்துள்ளது.

கே.வி.எஸ் இளங்கோவனுக்கு பின் திருநாவுக்கரசு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்நிலையில், அந்த பதவியில் இருந்து அவரை ராகுல்காந்தி நீக்கி உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநாவுக்கரசு மீது பல்வேறு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறாது. குறிப்பாக பா. சிதம்பரம், குஷ்பு, கார்த்திக் சிதம்பரம், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோரின் எதிர்ப்பை சம்பாதித்தார். எனவே, விரைவில் மாற்றப்படுவார் என முன்பே எதிர்பார்க்கப்பட்டது.

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போது அதிமுகவை புகழ்வது, சில சமயங்களில் திமுகவை விமர்சிப்பது என அவரின் நடவடிக்கை திமுக தரப்பினருக்கு பிடிக்கவில்லை. எனவே, திமுக தரப்பில் இருந்தும் அவருக்கு எதிராக புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.

அதேபோல், காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசலை தீர்க்கவும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முக்கியமாக, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் பெரிய அளவில் கூட்டணி பேச்சுவார்த்தையையும் அவர் நடத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

எனவேதான், அவர் நீக்கப்பட்டு, கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார் என காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து செய்தி வெளியாகியுள்ளது.