பிரபல நடிகையை திருமணம் செய்யும் ஆர்.கே.சுரேஷ்

தமிழ் சினிமாவில் வெற்றித் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்.கே.சுரேஷ் தற்போது வில்லன், ஹீரோ என தமிழ் சினிமாவில் நடிகராகவும் வலம்வரத் தொடங்கியுள்ளார். தனிமுகம், பில்லா பாண்டி, வேட்டை நாய் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும், ஹர ஹர மகாதேவகி, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஆர்.கே.சுரேஷ் தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது திருமண அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். அதன்படி, ‘சுமங்கலி’ என்ற சின்னத்திரை தொடரில் நாயகியாக நடித்த திவ்யா என்பவரை ஆர்.கே.சுரேஷ் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறாராம்.

இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தானாம். திவ்யாவின் சொந்த ஊர் ராமநாதபுரம். இதனாலேயே அவரை ரொம்பவும் பிடித்துப் போய்விட்டதாம். காரணம், ஆர்.கே.சுரேஷின் சொந்த ஊரும் ராமநாதபுரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில், இவர்களது திருமண நிச்சயதார்த்தம், மற்றும் திருமண தேதி குறித்த விவரங்கள் வெளிவரும் என நம்பலாம்.