விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுவதாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

அதில், நடிகர் விஜய் பேசியபோது, படத்தில் முதலமைச்சராக நடித்துள்ளதாகவும், நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்கமாட்டேன் என்றும், முதலில் ஊழலை ஒழிப்பதாகவும் கூறினார். ரசிகர்களுக்கு ‘உசுப்பேத்துவரன் கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவரன் கிட்ட கம்முன்னும் இருந்தா, வாழ்க்கை ஜம்முன்னும் இருக்கும்’ என்று சில குட்டி கதைகளை கூறினார்.

விஜய்யின் இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின் பேச்சுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமலஹாசன் ஆதரவு தெரிவித்தார்.

விஜய்யின் இத்தகைய பேச்சு, அரசியலில் அவரின் வருங்கால வருகையை குறிப்பதாக பலர் கருத்து தெரிவித்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இன்னும் சிலர் விஜய்யின் கருத்துக்கு எதிராக தங்களது கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், பாபநாசத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தமிழன் என்ற முறையில் விரும்புகிறேன். விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு…? மக்களால் உயர்த்தப்பட்டவர் மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் என்ன தவறு…? விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.