சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 லிருந்து 50 வயதுடைய பெண்கள் செல்லக்கூடாது என்று தேவஸ்தானம் போர்டின் ஆகம விதிகள் கூறுகிறது.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம் என பரபரப்பான தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்புக்கு இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை (அக்.17) 6 மணிக்கு மேல் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் திரளாக ஐயப்பனை தரிசித்துவருகின்றனர்.

இருப்பினும், அப்பகுதி பெரும் பதற்றத்துடனேயே காணப்படுகிறது. காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

முன்னதாக, நேற்றிலிருந்தே கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் வரத் தொடங்கினர்.

போராட்டக்காரர்கள் அவர்களை வர வேண்டாம் என வற்புறுத்தினர், மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்கள், சபரிமலை கோயிலுக்கு வந்த பெண்களின் கால்களில் விழுந்து வர வேண்டாம் என்று கெஞ்சினார்கள்.

இந்நிலையில், பல இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீசி வன்முறையிலும் ஈடுபட்டனர். மேலும், பெண் செய்தியாளர்கள் 3 பேர் தாக்கப்பட்டனர்.

இதையடுத்து, காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இதனால் கேரளாவில் தற்போது பதற்றம் நிலவிவருகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும்விதமாக போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக பத்தன்திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த பதற்றமான சூழலிலும் பக்தர்கள் தொடர்ச்சியாக வந்தவண்ணமும், ஐயப்பனை வழிபட்டும் வருகின்றனர்.