நன்றி தலைவா – டிவிட்டரில் நெகிழ்ந்த சச்சின்

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பற்றி வெளியாக உள்ள திரைப்படம் தொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு, சச்சின் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் சச்சின் தெண்டுல்கர். தனது பேட்டிங் திறமை மூலம் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்தவர். எனவே, இவரது வாழ்க்கை வரலாறு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்கிற தலைப்பில் ஒரு சினிமாவாக தயாராகியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப்படம் வருகிற மே மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இதைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். “அன்பிற்குரிய சச்சின், இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கண்டு நெகிழ்ந்து போன சச்சின், தனது டிவிட்டர் பக்கத்தில் “ நன்றி தலைவா. இந்த படத்தை தமிழில் பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும்” எனக்கூறி, ட்ரெய்லரின் தமிழ் பதிப்பை இணைத்து பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை கூறும், தோனி படம் வெளியாகி வெற்றி பெற்றது. அந்த படம் வெளியான போது, நடிகர் ரஜினியை தோனி சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.