இயக்குனர் சுந்தர் சியின் பல வருட கனவுப்படமான ‘சங்கமித்ரா’ தற்போது நனவாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

‘சங்கமித்ரா’ என்னும் ராணி வேடத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன் குதிரையில் கம்பீரமாக அமர்ந்து கையில் வீரவாளுடன் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட்லுக்கை பார்க்கும்போதே ஆச்சரியப்படும் வகையில் உள்ளது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட் படமான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள திரையுலக பிரமுகர்களின் மத்தியில் வெளியாகியுள்ளதால் சர்வதேச அளவில் இந்த படத்தின் வியாபாரத்தை எளிதாக்கும் என்றும், தயாரிப்பாளரின் மிகப்பெரிய புத்திசாலித்தனமே இது என்றும் கோலிவுட்டில் பாராட்டப்படுகிறது.

ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது இந்த படத்தின் சர்வதேச வியாபாரத்திற்கு பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது