குழந்தைகளுக்கான ஃபேண்டசி படம் என்று இந்த படம் விளம்பரப்படுத்தப்பட்டபோதே இந்த படம் பாதி வெற்றி பெற்றுவிட்டது. படத்தில் குழந்தைகளுக்கு விருப்பமான காட்சிகள் கொட்டி கிடப்பதால் இந்த படத்தின் வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டுவிட்டது

தாய் மகள் என இரண்டு பேய் இருக்கும் பங்களா ஒன்றில் முதலில் ஏழு குழந்தைகளும் பின்னர் இரண்டு குழந்தைகளும் என ஒன்பது குழந்தைகள் நுழைகின்றனர். அந்த பங்களாவில் இருக்கும் மகள் பேய் மற்ற குழந்தைகளுடன் விளையாட விரும்புகிறது. இந்த நேரத்தில் குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் திலீப் சுப்பராயன், குழந்தையை கொலை செய்தால் ரூ.500 கோடி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருவரும் பங்களாவினுள் நுழைகின்றனர். இதுபோக ஒரு காதல் ஜோடியும் நுழைகின்றது. இவர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகள், பேய்களின் மிரட்டல், பேய்களை மிரட்டும் குழந்தைகள் என முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் தான் மீதிக்கதை

இந்த படத்தில் நடித்திருக்கும் ஒன்பது குழந்தைகளுக்கும் முதலில் திருஷ்டி சுற்றி போட வேண்டும். அட்டகாசமாக நடித்துள்ளனர். குறிப்பாக நிஷேஷ் என்ற சிறுவன் அபார நடிப்பு. திலீப் சுப்பராயன், புன்னகைப்பூ கீதா மற்றும் கார்டியன்கள் இருவர், தாத்தாவாக நடிக்கும் போலீஸ் என ஒருவருக்கொருவர் நடிப்பில் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர்.

பேய் என்பது ஒரு பயமுறுத்தும் விஷயம் இல்லை என்று ஒவ்வொரு குழந்தையும் இந்த படத்தை பார்த்தால் புரிந்து கொள்ளும். இப்படியொரு கான்செப்ட்டை சிந்தித்த இயக்குனர் மாரீசனுக்கு பாராட்டுக்கள். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை காமெடியை கொஞ்சம் கூட குறைக்காமல், அதே நேரத்தில் நக்கல், நையாண்டியுடன் சமூக அவலங்களையும் தோலுரித்துள்ளார் இயக்குனர்

பேய்கள் வரும் காட்சிகளில் கிராபிக்ஸ் கலக்கல், தரமான ஒளிப்பதிவு, பக்கா எடிட்ட்ங் மற்றும் இசையமைப்பாளர் ஷபீரின் பின்னணி இசை, ரவிகண்ணனின் ஒளிப்பதிவு, விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு ஆகியவை கனகச்சிதம்

இந்த படத்தின் சில ரசிக்கத்தக்க வசனங்கள்

‘நீ என்னை கொன்றுவிட்டால் நானும் பேயாக மாறி உன்னை கொடுமைப்படுத்துவேன்’

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

சாகாவரம் தரும் நெல்லிக்கனியை சாப்பிட்ட அதியமான் ஏன் இறந்தார்?

சொர்க்கத்துக்கு போனால் சந்தோஷமாக இருக்கலாமே, அப்புறம் ஏன் மனிதர்கள் பூமியில் வாழ்ந்து கஷ்டப்படுகிறார்கள்

நிறைவேறாத ஆசையோட செத்தவங்க பேயாக மாறுவாங்கன்னா, இந்தியா சுதந்திரம் அடையனுங்கிற ஆசை நிறைவேறாம செத்த சுபாஷ் சந்திரபோஸ் பேயா மாறுனாரா? இனத்துக்காக செத்த எத்தனையோ தலைவர்கள் ஏன் பேயா வரல்ல?

தமிழ், தெலுங்கு, கன்னடம், தெலுங்கு பேசறவங்க இறந்துபோய் பேயானா, அதே மொழியில பேசுவாங்களா? இல்ல பேய்களுக்குன்னு ஒரு காமன் மொழி இருக்கா?

‘பணம் நிரந்தரம் இல்லைன்னு சொன்னவன் எவனும் உயிரோட இல்லை, ஆனால் பணம் நிரந்தரமா இருக்குது;

வாய்ப்புக்கு மட்டும் இன்னொரு வாய்ப்பே கிடையாது;

தனியார் பள்ளியில படிக்கிற பசங்களா? அப்ப பெத்தவங்களோட மொத்த பணத்தை அப்படியே உருவியிருப்பாங்களே’

போன்ற வசனங்களில் உள்ள கருத்துக்கள் அருமை

மொத்தத்தில் சங்குசக்கரம் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் முழு திருப்திபடுத்தும்