இப்ப இதுதான் நாட்டுக்கு முக்கியமா? சரண்யா மோகன் கணவர் பதிலடி

வெண்ணிலா கபடிக்குழு, வேலாயுதம், யாரடி நீ மோகினி உள்பட பல படங்களில் நடித்த நடிகை சரண்யாமோகன் தான் கடந்த சில நாட்களாக மீம்ஸ் தயாரிப்பாளர்களுக்கு தீனியாக இருந்தார். சமீபத்தில் இணையத்தில் வெளியான அவருடைய குண்டான உடலமைப்பை கேலி செய்து மீம்ஸ்கள், பதிவுகள், செய்திகள் ஆகியவை வெளிவந்தன.

இதனால் கடுப்பான சரண்யா மோகன் தனது குண்டு உடலை கேலி செய்த நெட்டிசன்களுக்கு ஃபேஸ்புக்கில் பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது: ‘நான் ஒரு பெண், ஒரு தாயாக இருப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். தாய்மைக்கு பின் ஒரு பெண்ணின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். நான் எப்படி இருக்கிறோனோ அதனை ஏற்றுக்கொள்ளும் உண்மையான மனிதர் எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

சரண்யாமோகன் மட்டுமின்றி அவருடைய கணவர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணனும் தனது ஃபேஸ்புக்கில் நெட்டிசன்களை வறுத்தெடுத்தார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியபோது, ‘நாட்டில் எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் இருக்கும்போது சரண்யா வெயிட் போட்டது முக்கியமான பிரச்சனை இல்லை. என் மனைவி திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை. அதை நான் பாராட்டுகிறேன். அவர் தாயான பிறகு வெயிட் போட்டதை கிண்டல் செய்பவர்களுக்கு நல்ல எண்ணம் இல்லை’ என்று கூறியுள்ளார்.

சரண்யா மோகனும் அவருடைய கணவரும் மாறி மாறி பதிலடி கொடுத்ததால் கேலியும் கிண்டலும் செய்த நெட்டிசன்கள் தற்போது அமைதியாகிவிட்டனர்.