சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலா நேற்று சிறையில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனால் சிறை வளாகமே பரபரப்பில் உள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் சிறையில் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய சசிகலாவுக்கு சர்க்கரையின் அளவு திடீரென அதிகமாக பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று திடீர் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா பெரும்பாலும் காலை உணவை எடுத்துக்கொள்வதில்லையாம். மேலும் கடந்த சில நாட்களாகச் சர்க்கரை வியாதிக்கான மாத்திரைகளையும் சரியாக சசிகலா எடுத்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாக நேற்று சிறையில் சசிகலாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.

மயக்கமடைந்த சசிகலாவை உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு அவர் சில மணிநேரம் சுயநினைவு இல்லாமல் இருந்ததாக தகவல்கள் கசிகின்றன. பின்னர் மருந்துகள் செலுத்திய பிறகு சசிகலா கண்விழித்ததாக சொல்லப்படுகிறது.

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் இருக்க வேண்டும் என சொல்லியிருப்பதால், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலேயே சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறை விதிகள் அனுமதித்தால் வெளியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்துவருவதாக தகவல்கள் வருகின்றன.