தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவுச் செய்தியை கேட்ட ஜெயலலிதாவின் தோழி சசிகலா மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். அன்று இரவு சாப்பிடாமல் கருணாநிதியை நினைத்து கண்ணீர் விட்டுதாகவும் தகவல்கள் வருகின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவரை பார்க்க டிடிவி தினகரன் அவரது மனைவி அனுராதா, தினகரனின் மகள், மற்றும் நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரன் அவரது மனைவி, மகள், ராஜராஜன் அவரது மனைவி ஷகிளா, சசிகலா உதவியாளர் கார்த்திக் மற்றும் வழக்கறிஞர்கள் அசோகன், சுரேஷ் ஆகியோர் சிறைக்கு சென்றனர்.

அப்போது அவர்களை சந்தித்த சசிகலா திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு குறித்து விசாரித்துள்ளார். மேலும் அவர்களிடம் கலைஞருடைய துக்க நிகழ்வுக்கெல்லாம் போனீங்களா? அவரு இறந்துட்டாரு என்பதை நம்பவே முடியலை. எப்பவும் போல ஹாஸ்பிட்டலுக்கு போய்ட்டு திரும்பி வந்துடுவாருன்னு தான் நினைச்சேன்.

அன்னைக்கு இரவு 8 மணிக்கு சாப்பிடும் போதுதான் விஷயத்தை சொன்னாங்க. என்னால சாப்பிடவே முடியலை. அப்படியே எழுந்து வந்துட்டேன். எங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சதே அவருதான். பல தடவை அவரை நான் நேரில் பார்த்து இருக்கேன் என நீண்ட நேரம் கலைஞரைப் பற்றியே பேசியிருக்கிறார் சசிகலா.