தேர்தல் முடிவுகள் வெளியானப் பின் அதிமுக ஆட்சியைக் கலைக்க பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிறார். வாரம் ஒருமுறை டிடிவி தினகரன் சிறைக்கு சென்று தமிழக அரசியல் சூழ்நிலைகளை அவருக்கு விளக்கி வருகிறார். அவரைத் தவிர அவரது குடும்பத்தார் கூட அதிகமாக சசிகலாவை சென்று பார்ப்பதில்லை.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஆகியவற்றால் தமிழக அரசியல்களம் மிகமுக்கியமானக் கட்டத்தை எட்டியுள்ளது . தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அமமுகவைச் சேர்ந்த தங்கத் தமிழ்ச்செல்வன்  திமுக வுடன் சேர்ந்தாவது அதிமுக ஆட்சியைக் கலைப்போம் என உறுதியாகக் கூறியுள்ளார்.

இதனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் சூழலை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அமமுக தலைவர் சசிகலா சிறையில் இருந்து பரோலில் வெளிவர நினைப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகளில் தினகரன் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதுவரை 2 முறை பரோலில் சசிகலா வெளியே வந்திருக்கிறார். கடைசியாக தனது கணவர் நடராஜன் மரணத்தின் போது பரோலில் வெளியே வந்த போது விடுமுறைக்கு முன்னதாகவே மீண்டும் சிறைக்கு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.