பெரியார் திடலில் நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்தியராஜ், ஆன்மீக அரசியல் செய்ய உள்ள நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விளாசி பேசினார்.

நேற்று முன்தினம் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சத்தியராஜ், மயில்சாமி, ராஜேஷ் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் பேசிய நடிகர் சத்தியராஜ், அரசியல் என்பது சமூக சேவை. பதினான்கு வயதில் கலைஞர், பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்று களத்தில் இறங்கிப் போராட வந்தார். அந்தப் பதினான்கு வயது சிறுவனுக்கு நாம் எதிர்காலத்தில் முதலமைச்சராக வருவோம் என்ற எண்ணம் ஒரு துளியாவது இருந்திருக்குமா? அதுதான் சமூக சேவை. அதுதான் அரசியல்.

திட்டம் போட்டு கணக்குப் போட்டு வருவதற்குப் பெயர் அரசியல் அல்ல; அது பிசினஸ். ஆன்மீக அரசியல் என்பது அந்த பிசினஸிற்கு வைத்த பெயர். எனக்குத் தெரிந்த வரையில் இரும்புக்கரம் கொண்டு அடக்குவது அல்ல ஆன்மீக அரசியல், அன்புக்கரம் கொண்டு அரவணைப்பதுதான் ஆன்மீக அரசியல். நான் பெரியாரைப் படித்ததால் நிம்மதியாக இருக்கிறேன். எனக்கு மலைக்குப் போய்தான் நிம்மதி வர வேண்டும் என்றில்லை என ரஜினியை கடுமையாக தாக்கிப்பேசினார்.