கடுமையானத் தண்ணீர் பற்றாக்குறைக் காரணமாக தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துராஜா பெண்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பருவமழைப் பொய்த்ததால் இந்த ஆண்டு கோடைக்காலம் முழுவதும் தமிழகமெங்கும் தண்ணீர் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கிறது. சென்னைக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரிகள் வறண்டு விட்டதோடு, மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீரும் வற்றிவிட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தண்ணீர்ப் பற்றாக்குறையால் சென்னை உள்ள பல ஃசாப்ட்வேர் நிறுவனங்கள் தண்ணீர் இல்லாதால் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு கூறிவிட்டது. மேலும் சில ஹோட்டல்கள் மதிய உணவை நிறுத்தி வைத்துள்ளனர். இதையடுத்து தண்ணீர்ப் பற்றாக்குறையால் மற்றொரு சோகமான சம்பவம் நடந்துள்ளது.

தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துராஜா பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் சுமார் 3000 மாணவிகள்  படித்து வருகின்றன. கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக 6 முதல் 8 ஆம் வகுப்பு வரைப் படிக்கும் மாணவிகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோருக்கு அறிவிப்பு தரப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அரசு அனுமதியோடுதான் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.