கல்விக் கொள்கை குறித்து சூர்யா தெரிவித்த கருத்து பற்றி கருத்து தெரிவித்த இயக்குனர் சங்கர் பற்றி சீமான் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு நுழைவு தேர்வு போன்றவைகளால் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சமீபத்தில் சூர்யா பேசினார். மேலும் புதிய கல்வி கொள்கை குறித்தும் அவர் விமர்சித்தார். இதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதரவு கிடைத்தது. ரஜினி கமல் போன்றோர் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சூர்யா தெரிவித்துள்ள கருத்து பற்றி தனக்கு எதுவும் தெரியாது என இயக்குனர் சங்கர் சமீபத்தில் பதில் கூறியிருந்தார். சூர்யா கல்விக் கொள்கை குறித்து என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது புதிய கல்வி கொள்கை இன்னும் முழுதாக படிக்கவில்லை என அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த நாம் தமிழர் சீமான் “அவருடைய சமூகப் பொறுப்பு அவ்வளவுதான். சமகாலத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இவர்கள் இயக்குனராக இருக்கிறார்கள். திரைப்படங்களில் மட்டும் சமூக கருத்துகள் புரட்சிக் கருத்துக்களை சொல்வது ஏமாற்று வேலை” என அவர் தடாலடி பேட்டி கொடுத்தார் .

மேலும் சில இயக்குனர்கள் 30 கோடி, 40 கோடி சம்பளமாக பெறுகிறார்கள் ஆனால், கஜா புயல் போன்ற இயற்கை பேரழிவு ஏற்பட்டபோது அவர்கள் ஒரு சிறு தொகை கூட கொடுக்கவில்லை. இவர்களது சமூக பொறுப்பு அவ்வளவுதான். மது குடிப்பது உடலுக்கு கேடு புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் என்று டைட்டில் போட்டு விட்டால் சமூகப் பொறுப்பு முடிந்து நினைக்கிறார்கள் என்று அவர் காட்டமாக பேட்டி கொடுத்தார்.