தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யத்தின் பங்களிப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலில்  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க இருக்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 38 இடங்களில் பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது. தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் மற்றும் ம.நீ.ம ஆகியக் கட்சிகள் மூன்றாம் இடத்தைப் பல இடங்களில் கைப்பற்றியுள்ளனர். இந்த இருக் கட்சிகளும் சேர்ந்து மொத்தமாக 36 லட்சம் வாக்குகளைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த தேர்தலை விட நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் மும்மடங்காக அதிகரித்துள்ளது. இதனை நாம் தமிழர் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் சீமானும் கமலும் முக்கியமான தலைவர்களாக உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

தேர்தலில் கமல் கட்சியின் பங்களிப்பு குறித்து சீமான் பதில் அளித்துள்ளார். ஆன்ந்த விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ‘கமலின் பங்களிப்பு என தேர்தலில் எதுவும் இல்லை . அவர் 50 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். அதனால் அவர் ஒரு பர்னாசிலிட்டியாக பார்க்கப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் வெள்ளையாக இருப்பதால் மக்கள் அவர் பொய் சொல்லமாட்டார் என நம்பி வாக்களித்திருக்கிறார்கள். அடுத்த தேர்தலிலும் இதே மாதிரி தோல்வி வந்தால் அவர் தாங்குவாரா எனத் தெரியவில்லை.ஆனால் நாங்கள் அடுத்த தேர்தலிலும் நாங்கள் தனியாக நிற்போம். பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுப்போம். அதற்காக இப்போதே தயாராகி வருகிறேம்’ எனத் தெரிவித்துள்ளார்.