மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை அளித்துவிட்டு திரும்பிய சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரை கேரள போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு வழங்கினர். இதனையடுத்து அவர்கள் மீண்டும் தமிழகம் திரும்பினர்.

இந்நிலையில் அவர்கள் பொருட்கள் கொண்டு சென்ற வாகனத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரம் படம் இருந்ததால் அவர்கள் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகமடைந்து நாம் தமிழர் கட்சியினர் 100 பேரைத் தடுத்து நிறுத்திய கோட்டயம் கிழக்கு காவல் நிலைய போலீஸார், சுமார் 4 மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது சீமான் உள்ளிட்ட அவரது கட்சியினரை தரையில் அமர வைத்து விசாரணை நடத்தி பின்னர் விடுவித்துள்ளனர். கேரள போலீசாரின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நேற்று பேசிய சீமான், விடுதலைப் புலிகள் அமைப்பினராக நாங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினர். மேலும் பாஜக தரப்பினர் புகார் கூறியதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டது என சீமான் தெரிவித்துள்ளார்.