கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார். மேலும் இதன் மூலம் கோடிக்கணக்குகளில் வருமானமும் ஈட்டி வருகிறார். கிரிக்கெட் மற்றும் நாட்டில் நடக்கும் முக்கியமான விஷயங்களுக்கு உடனடியாக நகைச்சுவையாக எதிர்வினையாற்றுவது சேவாக்கின் வாடிக்கை. சில நேரங்களில் பலரையும் கேலி செய்து டிவிட் செய்யும் சேவாக் தன்னையும் விட்டு வைப்பதில்லை. இப்போது தன்னையேக் கேலி செய்யும் விதமாக ஒரு டிவிட்டைப் போட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி 4-0 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியது.  அந்த தொடர் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அத்தொடரில் தன்னுடைய மோசமான ஆட்டம் பற்றிய ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார் விரேந்திர சேவாக். அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத சேவாக் மூன்றாவது டெஸ்ட்டில் களமிறங்கினார். ஆனால் இரு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆக, அந்த போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

தனது டக் அவுட்களைக் கேலி செய்யும் விதமாக ‘“8 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்..  பர்ஹிங்ஹாமில் இரு இன்னிங்ஸ்களிலும் நான் டக் அவுட் ஆனேன். இங்கிலாந்துக்கு செல்ல 2 நாட்கள் பயண நேரம், மற்றும் 188 ஓவர்கள் பீல்ட்.. இதனால் அதிருப்தியடைந்த நான் ஆர்யபட்டாவுக்கு(பூஜ்யத்தைக் கண்டு பிடித்தவர்) அர்ப்பணம் செய்ய வேண்டியதாயிற்று’ எனக் கேலியாக பதிவு செய்துள்ளார்.