அமமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் திமுக வில் இணைந்துவிடுவார் என அதிமுக வின் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் முழுவதும் ’அவர்’ அந்தக் கட்சியில் சேரப்போகிறார், ’இவர்’ இந்தக் கட்சியில் சேரப்போகிறார் என தமிழக அரசியல்வாதிகள் குட்டையைக் குழப்பிக்கொண்டு இருக்கின்றனர். முன்னதாக ஸ்டாலின் ஜனாதிபதி பதவிக்காக காங்கிரஸில் சேர்ந்துவிடுவார் என ராஜேந்திர பாலாஜி கூற இப்போது தங்க தமிழ்ச்செல்வன் திமுக வில் சேரப்போகிறார் என செல்லூர் ராஜு புதுக் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு திமுகவோடு இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம். ஆனால் திமுகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கமாட்டோம் தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார். இது குறித்து அதிமுக வின் செல்லூர் ராஜு ‘அவர் திமுகவுக்கு செல்ல இருக்கிறார் என்பதையே அவரது பேட்டிகள் உணர்த்துகின்றன. அவர் தினகரன் கூடவே இருந்துகொண்டு அவருக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு வருகிறார். இவரும் செந்தில் பாலாஜி போல திமுகவில் ஐக்கியமாகக் கூடும்’ எனத் தெரிவித்துள்ளார்.