7 வருட ரஜினியின் சாதனையை முறியடித்த ராஜமெளலி

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் தான் இதுவரை தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றிருந்தது. இந்த படம் தமிழகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் செய்தது. இந்த சாதனை கடந்த 7 வருடங்களாக எந்த திரைப்படத்தாலும் உடைக்க முடியாத நிலையில் தற்போது எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி 2′ திரைப்படம் முறியடித்துள்ளது.

‘பாகுபலி 2’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகி நேற்று வரை தமிழகத்தில் மட்டும் ரூ.106.70 கோடி வசூல் செய்துள்ளது இதன்மூலம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமான ‘எந்திரன்’ திரைப்படத்தை ‘பாகுபலி 2’ பின்னுக்கு தள்ளிவிட்டது. ஏற்கனவே இந்த படம் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் நம்பர் ஒன் வசூலை பெற்ற படம் என்ற நிலையில் தற்போது தமிழகத்திலும் இந்த பெருமையை பெற்றுள்ளது

மேலும் ‘பாகுபலி 2’ திரைப்படம் கேரளாவில் மட்டும் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் மோகன்லால் நடித்த புலிமுருகன் திரைப்படம் ரூ.90 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் ‘பாகுபலி 2’ திரைப்படம் தற்போதுதான் ரூ.50 கோடி வசூலை தாண்டியுள்ளது. அங்கும் முதலிடத்தை இந்த படம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்