சென்னையில் உள்ள காப்பகம் ஒன்றில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தொடர்பான புகாரில் காப்பகத்தின் உரிமையாளர் உட்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் நித்திய வாசல் என்ற காப்பகத்தில் சிறுவர் சிறுமிகள் தங்கியுள்ளனர். அவர்கள் அரசு பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் அம்பத்தூர் மாஜிஸ்திரேட் அனிதா தலைமையில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் மாணவிகள் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் காப்பக நிர்வாகிகளால் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுமை நடப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து குறிப்பிட்ட காப்பகத்துக்கு சென்ற மாவட்ட குழந்தைகள் காப்பக அலுவலர் செந்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில், காப்பகத்தின் காப்பாளர்களாக இருக்கும் பாஸ்கர், சாமுவேல் மற்றும் முத்து ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து காப்பகத்தின் உரிமையாளர் விமலா ஜேக்கப், உதவியாளர் நிர்மலா, பாஸ்கர் மற்றும் முத்து ஆகிய நான்கு பேரையும் காவல்துறை கைது செய்து போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.