கமல் நேற்றுக் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் அவர் மீது செருப்பு வீச முயன்றதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

அரவக்குறிச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன்  ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி  கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு’ என்று  கூறினார்.

இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்தது. பாஜக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் கமலுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக பிரச்சாரத்துக்கு செல்லாத கமல் நேற்று திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கமல் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு இளைஞர் அவர் மேல் செருப்பு வீச முயன்றுள்ளார்.

அதையடுத்து அங்குள்ள சிலர் அவருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. கோஷம் எழுப்பியவர்களைக் கைது செய்ததில் அவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்துக் கூட்டம் பாதியிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது.