சிம்புவிற்கு வந்த சிக்கல் – ஏஏஏ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்

நடிகர் சிம்பு நடித்து வரும் ஏஏஏ (அன்பானவன் அசராதவன் அடங்காதவன்) படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது நடிகர் சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்பு மொத்தம் 3 விதமான தோற்றங்களில் நடிக்கிறார். இதில் மதுரை மைக்கேல் என்கிற தோற்றத்திற்கான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. அடுத்து அஸ்வின் தாத்தா என்கிற கதாபாத்திரத்திற்கான காட்சிகள் தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில காட்சிகளை எடுக்க தாய்லாந்திற்கு சென்றது படக்குழு. ஆனால், 20 நாட்கள் அங்கு தங்கியிருந்து வெறும் 2 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இதனால், அதிருப்தி அடைந்த இப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், உடனே அங்கிருந்து திரும்பி வாருங்கள் என கூறிவிட்டாராம். இதனால், தாய்லாந்திற்கு சென்ற சிம்பு உள்ளிட்ட 20 பேர் சென்னை திரும்பிவிட்டனராம்.

மேலும், படப்பிடிப்பை நடத்த மீண்டும் தாய்லாந்து செல்ல வேண்டும் என படக்குழு கூற, ராயப்பன் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டாராம். அங்கு எடுக்க வேண்டிய காட்சிகளை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டாராம்.

எனவே, என்ன செய்வதென தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறதாம் படக்குழு..