Home சற்றுமுன் மறைந்தும் மறையாமல் வாழும் ஸ்வர்ணலதா-நினைவுப்பதிவு

மறைந்தும் மறையாமல் வாழும் ஸ்வர்ணலதா-நினைவுப்பதிவு

பாடகி ஸ்வர்ணலதா மறைந்து 12.9.2018டன் எட்டு வருடங்களாகிறது. திறமையான பல பாடல்களை மிக இனிமையாக பாடி நம்மை மகிழ்வித்தவர் ஸ்வர்ணலதா. கேரளாவை பூர்விகமாக கொண்ட ஸ்வர்ணலதா அவர்கள், இளையராஜா இசையமைத்த குரு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற உத்தமபுத்திரி நானு என்ற சோலோ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஸ்வர்ணலதா பாடிய பாடல்கள் எல்லாம் ஒன்ஸ்மோர் கேட்கும் ரகம்.

பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் அந்தமானின் அழகில் பானுப்ரியாவின் அழகிய அசைவுகளில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட மாலையில் யாரோ மனதோடு பேச பாடல் எல்லா தரப்பு ரசிகர்களையும் வயது பேதமின்றி இன்றும் கவர்ந்து வருகிறது என்றால் மிகையாகாது.

கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம்பெற்ற ஆட்டமா தேரோட்டமா பாடல் பட்டி தொட்டி சிட்டியெங்கும் பிரபலமான பாடலாக அந்தக்காலங்களில் மட்டுமல்ல இன்றும் வெகுஜன ரசிகர்களால் மிக மிக விரும்பி கேட்கப்படும் குத்தாட்ட பாடலாக விளங்குகிறது.

சின்னத்தம்பியில் இடம்பெற்ற போவோமா ஊர்கோலம் பாடல் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இசைக்கு வசம் ஆகாத இதயமெல்லாம் ஸ்வர்ணலதாவின் குரலுக்கு வசமாகி விடுவர்.

ஸ்வர்ணலதா பாடிய காலையில் கேட்டது கோயில் மணி, புன்னைவன பூங்குயிலே போன்ற பாடல்களுக்கு மிக விரிவான விமர்சனமே எழுதலாம், உன்னை நெனச்சேன் பாட்டுப்படிச்சேன் படத்தில் இடம்பெற்ற நெஞ்சை தொட்டு அள்ளி கொண்ட மன்னனின் பெயரும் என்னடி பாடலை மட்டுமே சொற்சுவை பொருட்சுவை இசைச்சுவை அறிந்து ரசித்து எழுத இரண்டு நாட்கள் ஆகும் அவ்வளவு அருமையான பாடல்களை எல்லாம் பாடிய ஸ்வர்ணலதா இன்று பாடி மகிழ்விக்க இல்லை.

ஸ்வர்ணலதாவின் ஸ்வர்ண குரலுக்கு மயங்காதோர் யாருமே இசையுலகில் யாருமில்லை. ரஹ்மானின் கருத்தம்மா படத்தில் இவர் பாடிய போறாளே பொன்னுத்தாயி, அலைபாயுதேவில் இவர் பாடிய மித மெல்லிய சோகப்பாடலான எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடல் கரையாத மனதையும் கரைய வைத்து விடும்.

இன்னும் அதிகமான சுவையான இனிமையான பாடல்களை கொடுக்க இருந்த ஸ்வர்ணலதாவின் இளவயது மரணம் பல இசை ரசிகர்களை இன்னும் துன்பத்தில் ஆழ்த்தி வருகிறது என்றால் மிகையாகாது.

அவரின் வசீகர குரல் அவரின் பாடல் வடிவில் மட்டுமே நம்மை மகிழ்விக்கிறது, பரவசப்படுத்துகிறது, அவரின் நீங்காத நினைவுகளை நினைவுப்படுத்துகிறது.