சிவாஜிக்கு சென்னை மெரீனாவில் மீண்டும் சிலை: முதல்வருக்கு திரையுலகினர் கோரிக்கை

திமுக ஆட்சியில் சென்னை மெரீனாவில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மிகப்பெரிய வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. ஆனால், அந்த சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும் அந்த சிலையை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த சிலையை அகற்றிவிட்டனர்.

இந்நிலையில், அகற்றப்பட்ட சிவாஜிகணேசன் சிலையை சென்னை கடற்கரை சாலையிலேயே நிறுவவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு திரைத்துறையினர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று சென்னையில் இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பெப்சி யூனியன் நிர்வாகிகள் இணைந்து கலந்துகொண்ட கூட்டத்தில் முதலமைச்சருக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழனாகப் பிறந்தது தமிழர்களாகிய நாம் பெற்ற பேறு. இந்திய சினிமாவை முதன் முதலில் உலகத்தரத்திற்கு எடுத்துச் சென்ற நடிகர். இயக்குநர் ராஜ்கபூர், சிவாஜியின் முகலட்சணம் நடிப்புக் கலைக்காகவே வடிவமைக்கப்பட்டது என்றார்.  இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சிவாஜியின் பாதம் தொட்டு ஆசீர்வாதம் பெற்றார். நடிப்பில் ஆல் ரவுண்டர் திலீப் குமார் நடிப்பில் சிவாஜிக்கு நிகர் கலையுலகில் எவருமில்லை என்று பாராட்டினார்.

அமெரிக்காவின் முன்னணி நடிகர் மார்லின் பிராண்டோ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பிற்கு இலக்கணம் படைத்தவர் என்று புகழாரம் சூட்டினார்.  நடிப்புக் கலைக்கு உலகின் எந்த பகுதியில் களம் அமைத்தாலும் அந்தக் களத்தில் தன் நடிப்புத்திறனால் பெரும் வெற்றி கண்டவர் நமது நடிகர் திலகம் அவர்கள்.

இப்படி கோடானுகோடி தமிழர்களுக்கும் தன் நடிப்புத் திறமையால் பெருமையைத் தேடித்தந்தவரை அடையாளம் கண்டு அரங்கேற்றியவர்  பேரறிஞர் அண்ணா அவர்கள். பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் பாசறையில் உருவான பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்த் திரைப்படங்களில் அரசியலைப் புகுத்தி 1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆட்சியையே புரட்டிப் போட்டவர்.

அவர் அன்று கைப்பிடித்த அரியணை வேறு எவர் கையிலும் சிக்காமல் இன்றும் ஆலமரம் போல தழைத்துக் கொண்டிருக்கின்றது.  தமிழர்களும், தமிழும் ஆட்சியில் ஏறி அமர தமிழ்த் திரைப்படங்களும் தமிழ் முன்னணி நடிகர்களும் பெருமளவில் தங்களது உழைப்பை பங்களிப்பாக கொடுத்திருக்கின்றனர் என்பதை  நம்மை விட அண்ணாவின் தம்பிகளுக்கு தேர்தலில் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் தமிழ் மக்கள் அறிவார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் திரைப்படங்களில் பேசிய தமிழ் உலக மக்களிடம் தமிழ் மொழியின் வளமையை எடுத்துச் சென்றது.  தமிழர் வாழ்வியல் கருத்துக்களையும், தமிழ் நாகரிகத்தையும், பண்பாட்டையும் எடுத்துக்காட்டியது.

உரைநடைத் தமிழின் நவரச உணர்வுகளையும், பேசும் செந்தமிழின் இனிமையையும், மக்களின் செவிகளில் தேனாக ஊற்றியவர் சிவாஜி கணேசன். தாய்த்தமிழ் அன்னையின் மூத்த மகனான அவர் மறையவில்லை. சாதனை புரிந்தவராக ஊடகங்களில் நம் தாய்த்தமிழுடன்  வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால், வங்கக் கடற்கரையில் உலவும் தமிழ்த்தென்றல் அவரது சிலையைத் தழுவியபடி அவரை பாராட்டிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது தமிழ்ப் படைப்பாளிகளாகிய எங்களது ஆவல் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆவலும் கூட.

எனவே, நடிகர் திலகம் அவர்களின் நல்லுருவச் சிலையை மெரினா கடற்கரைச் சாலையிலேயே நல்லதொரு இடத்தை தேர்ந்தெடுத்து நீங்கள் நிறுவிட வேண்டும் என்று அன்புடன் எங்களது கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறோம். இதையே உலகத்தமிழர்களின் கோரிக்கையாகக் கருதி நீங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டுமென்று கரம் கூப்பி வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.