ஒவ்வொரு வீட்டிலும் கணவர் அல்லது மனைவி விட்டு கொடுத்து வாழ்ந்தால்தான் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும் என்றும் எங்கள் வீட்டில் பெரும்பாலும் எனது கணவர் பிரசன்னாதான் விட்டுக்கொடுப்பார் என்றும் நடிகை சினேகா கூறியுள்ளார்

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ டி.வி. நிகழ்ச்சியில் பிரசன்னா- சினேகா காதல் தம்பதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது சினேகா கூறியபோது, ‘ “நானும் பிரசன்னாவும் சந்தித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. வீட்டில் அதிகம் விட்டுக்கொடுப்பது கணவர் தான். மகன் விஹான் வந்த பிறகு எங்கள் காதல் பக்குவம் அடைந்து இருக்கிறது என்று கூறினார்.

தாயின் பெருமை குறித்து இதே நிகழ்ச்சியில் பிரசன்னா கூறியபோது, ‘சினேகாவுக்கு பிரசவவலி ஏற்பட்டபோது எனக்கு பெண்கள் மீதான மரியாதை மிகவும் அதிகரித்தது. பிரசவ வலியை பார்ப்பதற்கே எனக்கு பயமாக இருந்தது. சினேகாவுக்கு இயற்கையான பிரசவ வலி அறிகுறி ஏற்படவில்லை. எனவே, வலியை அதிகரிக்க ஊசி போட்டார்கள்.

முதலில் சினேகாவை தொட்டு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன். டாக்டர் பெரிய ஊசியை எடுத்ததை பார்த்ததும் எனக்கு தலை சுற்ற தொடங்கிவிட்டது. டாக்டரம்மா நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஓரமாக சென்று உட்கார்ந்து கொண்டேன்.

இப்போதும், எனக்கு தலைவலி வரும்போது எல்லாம் இதைத்தான் நினைப்பேன். தலைவலியையே தாங்க முடியவில்லையென்றால் அந்த பிரசவ வலி எப்படி இருக்கும்? ஒவ்வொரு அம்மாவும் தெய்வம். அம்மாவை தெய்வத்துடன் ஒப்பிடுவது தவறே இல்லை” என்று கூறினார்.