திண்டிவனம் அருகே தனது தந்தையின் சடலத்தின் முன்னர் மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

திண்டிவனத்தைச் சேர்ந்த தெய்வமணி, செல்வமணி தம்பதியினரின் இளையமகன் அலக்சாண்டர். இவர் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். அதேப் பள்ளியில் வேலை செய்யும் ஜெகதீஸ்வரி என்ற பெண்ணைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் அடுத்தமாதம் 2 ஆம் தேதி திருமணம் செய்ய இருந்தார்.

இந்நிலையில் அலக்சாண்டரின் தந்தை தெய்வமணி திடீரென உடல்நலக்குறைவுக் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். தன் தந்தையின் ஆசிர்வாதத்தோடு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைத்த அலக்சாண்டருக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்துள்ளது. இதனால் தனது உறவினர்களை அழைத்து தந்தையின் உடலுக்கு முன்னர் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

இதற்குப் பெண் வீட்டாரும் ஒத்துக்கொள்ள உடனடியாக அலக்சாண்டருக்கும் ஜெகதீஸ்வரிக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த சம்பவம் வந்திருந்த அனைவரும் நெக்குருகிப் போயுள்ளனர்.