காமெடி நடிகர்கள் எல்லோரும் தற்போது ஹீரோவாக மாறிவரும் நிலையில், சூரி மட்டும் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் தமிழ் சினிமாவில் காமெடியனாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார். கைவசம் நிறைய படங்களை வைத்துக் கொண்டு பிசியாக பணியாற்றி வரும் நிலையில், தன்னை இந்தளவுக்கு உயர்த்தியவர்களை நினைவுகூறும் விதமாக சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த ‘ஜீ’ படத்தில் நானும் இரண்டு காட்சிகளில் நடித்தேன். அஜித்துக்கு வில்லனாக நடித்தவரின் அடியாளாக நான் வருவேன். அப்போது ஒரு காட்சியில் நான் அஜித்தை கலாய்த்து பேசினேன். கேமரா கட் ஆனதும், எல்லோரும் என்னை அழைத்து மிரட்டும் தோனியில் நீ என்ன வசனம் பேசினே என்று கேட்டனர். நான் பயந்துகொண்டே நின்றுகொண்டிருந்தார். அப்போது உடனே அஜித் உள்ளிட்ட அனைவரும் என்னை கட்டிப்பிடித்து சரியான நேரத்தில் சரியான வசனம் பேசினேன் என்று பாராட்டினார்கள்.

அதேபோல், சினிமாவில் நான் இன்று பெரிய காமெடியனாக உயர்ந்ததற்கு சுசீந்திரன் கொடுத்த புரோட்டா சீன் தான் காரணம். அவரை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். ஆனால், சமீபத்தில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் நான் நடித்த ‘புஷ்பா புருஷன்’ என்ற கதாபாத்திரம் தற்போது புரோட்டா சூரியை மறக்கடித்துவிட்டது.

காமெடி நடிகர்கள் எல்லோரும் ஹீரோக்களாக மாறி வந்தாலும் எனக்கு ஹீரோவாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மற்றவர்களைப் போல் முன்னணி நடிகைகளுன் டூயட் பாட ஆசைதான். ஆனால், அந்த நடிகைகள் நம்முடன் டூயட் பாட ஆசைப்பட வேண்டுமே? என்ற தனது ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்தார்.