பாசிச பாஜக அரசு ஒழிக ஒழிக என விமானத்தில் தமிழிசை முன்பு கோஷமிட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்டார். அவருக்கு தற்போது நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியுள்ளது தூத்துக்குடி நீதிமன்றம்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி விமானநிலையம் வந்தார். அவர் வந்த அதே விமானத்தில் கனடாவில் ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தார் சோபியா என்ற மாணவி. அவர் விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசையை பார்த்ததும் பாசிச பாஜக அரசு ஒழிக ஒழிக என கோஷமிட்டுள்ளார்.

இதனை கேட்டதும் தமிழிசை உள்ளிட்ட அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் விமானம் தரையிறங்கியதும் தமிழிசை அந்த கோஷமிட்ட பெண்ணிடம் பாஜகவை விமர்சித்தது குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு அந்த பெண்ணும் தனக்கு பேச்சுரிமை உள்ளது என பதிலுக்கு வாக்குவாதம் செய்தார். இதனையடுத்து அந்த பெண் மீது விமான நிறுவனத்திடமும், காவல்நிலையத்திலும் தமிழிசை புகார் அளித்தார். இதனையடுத்து சோபியா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சோபியாவை தூத்துக்குடி ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார். இதனையடுத்து சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சோபியா சார்பில் தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு அந்த மனு இன்றே விசாரணைக்கு வந்தது. அப்போது சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இன்னும் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட உள்ளார்.