மாணவி சோபியா விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்: சுப்பிரமணியன் சுவாமி பாய்ச்சல்!

விமானத்தில் தமிழிசை முன்னிலையில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியா விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மாணவி சோபியா பாசிச பாஜக ஒழிக என விமானத்தில் கோஷமிட்டதற்காக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை அந்த மாணவி மீது காவல்துறையில் புகார் அளித்து அவரை கைது செய்து சிறையில் அடைக்கும் அளவுக்கு சென்றார். இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பொதுமக்கள், இணையவாசிகள், அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் என பலரும் சோபியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுவாக தமிழர்களுக்கு எதிராக பல விவகாரங்களில் கருத்து சொல்லும் சுப்பிரமணியன் சுவாமி இதிலும் கருத்து தெரிவித்து டுவீட் செய்துள்ளார்.

கனடாவில் இருந்து வந்திருக்கும் தமிழக மாணவி சோபியா பாஜகவிற்கு எதிரான கருத்தினை பேசியிருப்பது அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவானவர் என்பதை குறிப்பதாக கூறியுள்ளார். மேலும் மற்றொரு டுவீட்டில் இதே போல பாராளுமன்ற பார்வையாளர் அறைக்கு வந்து சோபியா கோஷமிட்டிருந்தால் ஜாமின் இல்லாமல் மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என எச்சரித்துள்ளார்.