சமீபத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இதில் காவல்துறை 18 பேரை குருவியை சுடுவதுபோல சுட்டுக்கொன்றது. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்காக தமிழக அதிமுக அரசும், மத்திய பாஜக அரசும் அதிகமாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவி சோபியா விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டது இந்த தூத்துக்குடி மக்களின் உணர்வுகளின் எதிரொலி தான் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாணவி சோபியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சசிகலாவை நேற்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் விமானத்தில் மாணவி சோபியா பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட விவகாரம் குறித்து பேசினார். அதில் அவர் மாணவி சோபியாவுக்கு ஆதரவாக அது தூப்பாக்கிச் சூட்டால் இறந்த தூத்துக்குடி மக்களின் உணர்வுகளின் எதிரொலி என கூறினார்.

கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் சோபியா, காவல்துறை துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர். தூத்துக்குடி மக்களின் உணர்வுகளைத்தான் மாணவி சோபியா எதிரொலித்தார். இதனை தமிழிசை நாகரீகமாக கையாண்டிருக்கலாம். ஆனால் காவல் துறையில் புகார் தெரிவித்து சோபியாவை கைது செய்ய வைத்துள்ளார். இதுபோன்ற செயல்களில் தமிழிசை ஈடுபட்டிருக்கக் கூடாது.

தமிழிசையின் தந்தை மூத்த காங்கிரஸ் தலைவர், அவரது சித்தப்பா காங்கிரஸ் எம்எல்ஏ. அரசியலில் என்ன பிரச்னை வரும் என்பது சிறுவயதிலிருந்து தமிழிசைக்கு தெரியும். பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். என்னை யாராவது இப்படி விமானத்தில் விமர்சனம் செய்தால், அதனை உரிய முறையில் கையாண்டிருப்பேன். அதனைவிட்டுவிட்டு விமர்சனத்திற்காக புகார் செய்து கைது செய்யுமளவுக்கா கொண்டு செல்வார் தமிழிசை என்றார் தினகரன்.