பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டதற்காக மாணவி சோபியா கைது செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள், இணையவாசிகள் என பலரும் சோபியா கைதை கண்டித்தும் சோபியாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது தரப்பு விளக்கத்தை இன்று சென்னை விமான நிலையத்தில் அளித்துள்ளார். அதில், நேற்று இண்டிகோ விமானத்தின், உள்ளே சோபியா என்னை கடந்து செல்லும்போது என்னைப் பார்த்து பாரதிய ஜனதா கட்சி பாசிச ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டனர். நாகரிகம் கருதி விமானத்திற்குள் நான் எதுவும் பேசவில்லை.

மேலும் விமான வரவேற்பறைக்குள் நான் காத்திருந்தபோது, என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டே போனார். அப்போது நான் விமானத்திற்குள் இப்படி கோஷமிடுவது சரியா என்று கேட்டேன், எனக்கு பேச்சுரிமை இருக்கிறது, நான் பேசுவேன் என்று கூறிய அவர் சொல்ல முடியாத வார்த்தைகளையும் பேசினார். உங்களுக்குப் பேச்சுரிமை இருந்தாலும், விமானத்தில் பயணிகளுக்கு இடையூறாகப் பேசியது தவறு என்று அவரிடம் சொன்னேன்.

ஆனாலும் அவர் நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தார். அவர் சாதாரண பயணியை போல பேசவில்லை. அவருக்கு பின்னார் ஏதாவது ஒரு இயக்கம் இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு வந்தது. விமானத்தில் உள்ளே இருந்துகொண்டு அவர் செய்த டுவீட்டுகளை பார்க்கும் போது இது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என தெரிகிறது. மேலும் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட்டதாக தெரிவித்தார் தமிழிசை.