இசையமைப்பாளர் இளையராஜாவுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும் என பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பாடல்களுக்கு தன்னிடம் காப்புரிமை இருப்பதால், இசை நிகழ்ச்சிகளில் தனது பாடல்கலை பாடக்கூடாது என இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சமீபத்தில் நோட்டிஸ் அனுப்பினார். இது இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுபற்றி மனம் திறந்து பேசிய எஸ்.பி.பி “நானும் இளையராஜாவும் சினிமாவிற்கு வரும் முன்பே நண்பர்கள். பாடல்கள் குறித்த காப்புரிமை பற்றி இதற்கு முன்பு எனக்கு தெரியாது. அவர் நோட்டிஸ் அனுப்பிய பின்புதான் இப்படி ஒரு சட்டம் இருப்பதே எனக்குத் தெரியும். இது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் அவரிடம் முறைப்படி அனுமதி வாங்கியிருப்பேன். அவரின் பாடல்களுக்கு அவர் காப்புரிமை பெற்றுள்ளதும் எனக்கு தெரியாது.

இருந்தாலும், எங்களுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. எனக்கென்று சுயமரியாதை இருக்கிறது. அதுதான் தற்போது இளையராஜாவுடன் பேசவிடாமல் தடுக்கிறது. தங்களின் பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.