அமராவதியில் நானா? எஸ்.எஸ்.ராஜமௌலி விளக்கம்

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த பிறகும் இரண்டு மாநிலத்திற்கும் ஐதராபாத் தலைநகராக இருந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு இந்த உரிமை இரண்டு மாநிலங்களுக்கும் உள்ளது. இந்நிலையில், ஆந்திராவுக்கு புதிய தலைநகராக அமராவதியை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அமராவதியை பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான மாதிரி வடிவங்கள் பல்வேறு நாட்டு நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அதில், கடைசியாக பிரிட்டிஷ் கட்டிடகலை நிறுவனமான நார்மன் பாஸ்டர் அண்ட் பார்ட்னர்ஸை ஆந்திர அரசு தேர்வு செய்துள்ளது.

சட்டப்பேரவை அலுவலகம், உயர்நீதிமன்றம், அரசு வளாகம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்களை உள்ளடக்கிய உலகத்தரமான வடிவமைப்பை சமீபத்தில் இந்நிறுவனம் ஆந்திர அரசிடம் ஒப்படைத்துள்ளது. இதன் இறுதி வடிவமைப்புக்கு ‘பாகுபலி’ இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது அந்த செய்தியை எஸ்.எஸ்.ராஜமௌலி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, அமராவதி உருவாக்கத்திற்காக நான் ஆலோசகர், வடிவமைப்பாளர், சூப்பர்வைசர் உள்ளிட்ட பல பணிகளுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளதாக வெளியான செய்திகள் எதுவும் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்திலும் அவருடைய பிரம்மாண்ட அரங்குகள்தான் பரபரப்பாக பேசப்பட்டன. சமீபத்தில் வெளியான ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களிலும் பிரம்மாண்ட அரங்குகள்தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அந்த வரிசையில் இவரை அமராவதியை உருவாக்கும் பணியில் ஆலோசகராக நியமித்திருக்கலாம் என்று யூகத்தில் அடிப்படையிலேயே செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த செய்திகளுக்கு தற்போது ராஜமௌலி தகுந்த விளக்கம் அளித்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.