ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது: தமிழிசை அட்டாக்!

திமுக தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பாஜக சார்பில் வாழ்த்து சொல்லப்பட்டது. இருந்தபோதிலும் இந்தியா முழுவதும் காவிமயமாவதை தடுப்போம் என கூறியதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உறுப்பினர் அட்டையை வழங்கி பேசினார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. அப்போது தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தான் நல்லது நடக்கும் என்றார்.

மேலும், திமுக தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் பாஜக சார்பில் வாழ்த்து சொல்லப்பட்டது. இருந்த போதிலும் ஸ்டாலின் இந்தியா முழுவதும் காவிமயமாவதைத் தடுப்போம் என்கிறார். ஸ்டாலின் நினைத்தாலும் பாஜகவைத் தடுத்து விடமுடியாது. தமிழகத்தின் எல்லையைத் தாண்டினாலே அங்கீகாரம் இல்லாத நிலையில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றார் தமிழிசை.