தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி மற்றும் திமுக தலைவர் பதவியை மு.க.ஸ்டாலின் அழகிரிக்கோ அல்லது குடும்பத்தில் உள்ள வேறொருவருக்கோ அளிக்க வேண்டும் என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை ஒப்பந்தங்களை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கி ஊழல் செய்ததாக பிரபல டைம்ஸ் நவ் ஊடகம் செய்தி வெளியிட்டது. இதனையடுத்து திமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக டெல்லியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபித்துவிட்டால், அரசியலிலிருந்தே விலகிவிடுகிறேன் என்றார்.

மேலும், ஒருவேளை என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், ஸ்டாலின் அவரது எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக தலைவர் பதவியைத் துறந்து, அழகிரிக்கோ அல்லது குடும்பத்தைச் சார்ந்த வேறொருவருக்கோ பதவியைத் தர வேண்டும் என்று தெரிவித்தார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.