திமுக தலைவர் கருணாநிதி இறந்ததையடுத்து அடுத்த தலைவராக ஸ்டாலின் தான் வர வேண்டும் என பல முக்கிய திமுக தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது தொண்டர்கள் அனைவரும் என் பக்கம் தான் இருக்கிறார்கள் என அழகிரி போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த சமையத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு.

திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கடந்த 14-ஆம் தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூடி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டங்கள் ஒவ்வொரு மாவட்டமாக நடைபெற தொடங்கியுள்ளது. அதன்படி நேற்று திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில செயற்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ பேசினார். பின்னர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் முதல் தீர்மானம் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம். இரண்டாவது தீர்மானம் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்பதாகும். தலைவர் கலைஞர் அவர்களின், பேரிழப்புக்கு பிறகு கழகத்தைக் கட்டிக்காக்க, கழகத்தை வழிநடத்த 11/2 கோடி கழகதொண்டர்களின் ஏகோபித்த எண்ணம் நிறைவேற, கழக செயல்தலைவர் தளபதி அவர்களை திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவராக பொறுப்பெற்க இம்மாவட்ட கழகம் ஏகமனதாக முன்மொழிகிறது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.