தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதற்கான விசாரணையை நடத்தப்படும் என தெரிவித்த மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சிறையில் இருப்பார்கள் என கூறியுள்ளார்.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறுபான்மையினர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மக்களைப்பற்றியோ நாட்டைப்பற்றியோ கவலைப்படாமல் இருக்கிறார்கள். காண்டிராக்ட்டில் கமிஷன், சாலை போடுவதில் கரெப்ஷன் என அனைத்துத் துறைகளிலும் மாமூல் சென்று கொண்டிருக்கிறது.

ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு மாதாமாதம் ஐந்து முதல் பத்து கோடி வரை மாமூல் சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் கல்லூரிகள், ஹோட்டல், பங்களாக்கள் என வாங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதற்குரிய விசாரணை நடத்தப்படும். அப்போது எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் சிறையில்தான் இருக்கப் போகிறார்கள் என்றார் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக.