Home அரசியல் ஸ்டாலினின் அடுத்த டார்கெட் அமைச்சர் தங்கமணி: மின்சாரத்துறையில் ஊழல்!

ஸ்டாலினின் அடுத்த டார்கெட் அமைச்சர் தங்கமணி: மின்சாரத்துறையில் ஊழல்!

தமிழக மின்சாரத்துறையில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாகவும் அதன் காரணமாகவே கிராமப்புறங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின் திமுக தலைவரான பின்னர் வரிசையாக ஆளும் கட்சியினரின் ஊழல் குறித்து பேசி வருகிறார். அறிக்கைகள் மூலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். முதலில் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல் குறித்து பேசிய ஸ்டாலின் வரிசையாக முதல்வர், துணை முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இந்நிலையில் தற்போது ஸ்டாலினின் அடுத்த டார்கெட்டாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல்கள், முறைகேடுகள் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே ‘அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்’ அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன.

மின் பகிர்மான கழகத்தில் தரமற்ற நிலக்கரியை வாங்கி, 12 ஆயிரத்து 250 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு; அதிக விலை கொடுத்து தனியார் கம்பெனிகளிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்ததில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு; உதய் திட்டத்தில் கிடைத்த நிதியை உருப்படியான திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் முறைகேடு; மின்வாரியத்திற்கு எலெக்ட்ரானிக் மீட்டர்கள் கொள்முதல் செய்ததில் “மெகா” ஊழல் என்று ஊழல்களின் அருவருப்பான தேரோட்டம் மின் பகிர்மானக் கழகத்தில் நடைபெற்று, அ.தி.மு.க ஆட்சியில் நிர்வாகம் அடியோடு ஸ்தம்பித்து நிற்கிறது.

மின் தேவையை சமாளிக்க ‘பராமரிப்பு’, ‘ஃபால்ட்’ என்ற போர்வையில் மின்வெட்டுக்களை அமல்படுத்துங்கள் என்று வாய்மொழி உத்தரவு போயிருப்பதாகவும், அதை முன்னிட்டே, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மின்வெட்டுகள் அரங்கேறி, மக்களை இன்னலுக்கு உள்ளாக்கி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் நேற்றைய தினம் “மின் உற்பத்தி” குறித்து மின்துறை அமைச்சர் ஆய்வு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்தாலும், உண்மை என்னவென்றால் ஒரு அறிவிக்கப்படாத மின் வெட்டு தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது என்றும், அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அதிகாரிகள் கூட்டத்தை மின் துறை அமைச்சர் தங்கமணி கூட்டியிருக்கிறார் என்பதும், வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஆகவே, பராமரிப்பு என்ற போர்வையிலும், ஃபால்ட் என்ற போர்வையிலும் மக்களையும், விவசாயிகளையும், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களையும் கடும் பாதிப்புக்குள்ளாக்கும் “அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களை” உடனடியாக கைவிட வேண்டும். மின்பகிர்மானக் கழகத்தில் அ.தி.மு.க உருவாக்கியுள்ள “நிதி நெருக்கடியை” நீக்கி, மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, மின் பற்றாக்குறையைப் போக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.