நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் முறைகேடு: விஷாலுக்கு வந்த சோதனை

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதற்காக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட விஷால் கூட்டணி நட்சத்திர கிரிக்கெட் போட்டியை கடந்த வருடம் நடத்தியது. இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமத்தை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக நடிகர் சங்கத்தின் உறுப்பினரான வராகி என்பவர் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வராகி. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வராகி கொடுத்த புகாரில் முகாந்திரம் இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தி, அவர்கள் மீது வழக்கு தொடருமாறு வேப்பேரி மத்திய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனால், நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி ஆகியோருக்கு நெருக்கடி எழுந்துள்ளது. விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.