பிக்பாஸ் வீட்டிற்கு புதிய நபராக நடிகர் ஹரீஸ் கல்யாண் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா சென்ற பின், அந்த நிகழ்ச்சி களையிழந்து காணப்படுகிறது. அதனால், நேற்று நடிகை சுஜா வருணியை மேள தாளத்துடன் உள்ளே அனுப்பினர். அவரால் என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இன்று நடிகர் ஹரீஸ் கல்யாணை உள்ளே அனுப்பியுள்ளனர்.

அதுவும் அவர் சுவர் வழியாக வீட்டின் உள்ளே குதித்து எண்ட்ரி கொடுத்தார். இவர் இயக்குனர் சாமி இயக்கிய சிந்து சமவெளி படம் மூலம் 2010ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் சர்ச்சையை கிளப்பியதே தவிர பாக்ஸ் ஆபீசில் ஹிட் அடிக்கவில்லை. அதன்பின் ஹரீஸ் இயக்குனர் எஸ்.ஏ.சந்தரசேகர் இயக்கிய ‘சட்டப்படி குற்றம்’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அந்தப் படமும் வெற்றியடையவில்லை.  சிறு சிறு வேடங்களில் சில படங்கள் நடித்தார். ஆனால், 2014ம் ஆண்டு வெளியான ‘பொறியாளன்’ படம் அவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. அதன் பின் அவர் நடித்த வில் அம்பு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.  

இந்நிலையில்தான் தற்போது அவர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்துள்ளார். உள்ளே நுழைந்தவுடனேயே ஓவியாவிற்கு ஆரவ் கொடுத்த மருத்துவ முத்தம் பற்றி அவர் சினேகனிடம் பேசிக்கொண்டிருக்கும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. எனவே, இவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில திருப்பங்கள் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…