ரஜினியை மீண்டும் வம்புக்கு இழுத்த சுப்பிரமணியம் சுவாமி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இலங்கை செல்ல திட்டமிட்டு பின்னர் திடீரென ரத்து செய்த நிலையில் அப்போது கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, ‘ரஜினி ஒரு கோழை என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று ரசிகர்களிடையே பேசியபோது அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பான சில கருத்துக்களை தெரிவித்தார். தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருப்பதாகவும், ஒருவேளை அரசியலுக்கு வந்தால் உண்மையாக இருப்பது மட்டுமின்றி பணம் சம்பாதிக்கும் நோக்கம் உள்ளவர்களை அருகில் வைத்து கொள்ள மாட்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்

ரஜினியின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் இதுகுறித்து சுப்பிரமணியம் சுவாமி கூறியபோது, ‘ரஜினிக்கென ஒரு கொள்கையே கிடையாது. அவர் தமிழரே கிடையாது. அவர் கர்நாடகாவில் பிறந்த மராத்திய பின்புலத்தை சார்ந்தவர். தற்போது அவருடைய அரசியல் பார்வையில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் குறித்த கருத்தையெல்லாம் பற்றி பேசி வருகிறார். ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக தோல்வியடைவார்.” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சுவாமியின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.